லஞ்ச பணத்தில் கடலூரில் வீடு, 10 ஏக்கர் நிலம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்

கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச பணத்தில் கடலூரில் வீடு, 10 ஏக்கர் நிலம் வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2022-08-26 19:07 GMT

கிராம நிர்வாக அலுவலர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள தோப்பிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38). விவசாயி. இவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தன்னுடைய பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டார்.

அதற்கு அவர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை கொடுக்க விரும்பாத அவர் இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைபடி, அன்பழகன் ரூ.10 ஆயிரத்தை பார்த்தசாரதியிடம் கொடுத்த போது, அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

10 ஏக்கர் நிலம்

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, அவர் இது வரை லஞ்சமாக பெற்ற பணத்தில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஒரு வீடு, புவனகிரி தாலுகா பூவாணிக்குப்பத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கூத்தப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வீடு, 10 ஏக்கர் நிலம் வாங்கியது தொடர்பாக மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு புவனகிரி தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட 4 பேரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனர்.

தாசில்தாரிடம் விசாரணை

அதன்பேரில் நேற்று புவனகிரி தாசில்தார் ரம்யா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வட்ட துணை ஆய்வாளர், குறுவட்ட சர்வேயர் ஆகியோர் கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் முன்பு ஆஜரானார்கள். தொடர்ந்து அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி தொடர்பாக பல்வேறு விவரங்களை கேட்டு பெற்றனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். தேவைப் பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்