அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு மீதான புகார் மீது விசாரணை தொடங்கியது: பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவர்உதவி கலெக்டரிடம் நேரில் விளக்கம்

பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட நபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று போலீஸ்காரர்களிடம் விசாரணை நடக்கிறது.

Update: 2023-03-28 20:19 GMT

சேரன்மாதேவி:

பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட நபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று போலீஸ்காரர்களிடம் விசாரணை நடக்கிறது.

உதவி சூப்பிரண்டு மீது புகார்

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது.

இதுபற்றி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நேரில் ஆஜராகி விளக்கம்

இந்த நிலையில் பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா ஆகிய 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களுடன் நேரில் ஆஜராக உதவி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று முன்தினம் பகல் முழுவதும் யாரும் வராமல் இருந்தனர். பின்னர் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி சங்கர், நேற்று முன்தினம் இரவு உதவி கலெக்டர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அடுத்தடுத்து...

இதுவரையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 30 பேர் தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பற்களை இழந்தவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட உள்ளது.

போலீஸ்காரர்கள்

இந்தநிலையில் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களிடம் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார். மேலும் ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

துணை சூப்பிரண்டு நியமனம்

மேலும் 2 போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே புகாரில் சிக்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளதால் அங்கு பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்