கோயம்பேடு மார்க்கெட்டில் வெயிலால் வாடி வதங்கும் காய்கறி; குப்பைகளில் கொட்டும் அவலநிலை
கோயம்பேடு மார்க்கெட்டில் வெயில் காரணமாக காய்கறி வாடி வதங்குகிறது. இதனால் அழுகும் காய்கறியை குப்பைகளில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் தினமும் 350 முதல் 400 லாரிகளில் காய்கறி வருகிறது.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருவதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறி வாடி வதங்குவதாகவும், உடனடியாக அழுகி போய் விடுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட கேரட் வெயில் காரணமாக வதங்கி அழுகும் நிலைக்கு போனதால், அதனை அங்குள்ள கழிவுகள் கொட்டும் குப்பைக்கூடத்தில் கொட்டி மலைபோல் குவிக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
அழுகியதால் கொட்டப்பட்டது
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நல்ல தரமான ஊட்டி கேரட் நேற்று கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையிலும், பெங்களூரு கேரட் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்படி இருக்கும் போது அழுகும் நிலையில் வந்த இந்த கேரட் விலை போகாததால், கொட்டப்பட்டதாக வியாபாரிகள் கூறினர். ஆனால் சமூக வலைதளத்தில் விலை வீழ்ச்சியால் கொட்டப்பட்டதாக பரவியது.
இதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் சில காய்கறியும் அழுகிப் போய்விடுவதாக தெரிவிக்கின்றனர். உதாரணமாக மும்பை நாசிக்கில் இருந்து கொண்டு வரப்படும் பல்லாரி வெங்காயத்தில் சில மூடை வெங்காயம் அழுகிவிடுவதாகவும், இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே கோடை காலத்தில் காய்கறியை பாதுகாப்பாக பதப்படுத்த கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பாடுகள் செய்துதர வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றன.