பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய வேன்

திருச்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் சிக்கியது. இதில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-08-01 19:30 GMT

திருச்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் சிக்கியது. இதில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பாதாள சாக்கடை பணிகள்

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பொன்மலைப்பட்டியை சேர்ந்த திருஞானம் (வயது 48) என்பவர் ஒரு வேனில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்தார். பின்னர் மாலையில் அந்த குழந்தைகளை வீடுகளில் இறக்கி விடுவதற்காக வேனில் கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் பாரதி தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிரம்பி இருந்தது.

பள்ளி குழந்தைகள் தப்பினர்

இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிவந்த வேனின் முன் சக்கரம் பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை கண்ட அந்த பகுதி மக்கள் பள்ளி குழந்தைகளை பத்திரமாக வேனில் இருந்து இறக்கினர்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், முடிவடைந்த பகுதியில் பள்ளங்களை சீராக மூட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்