திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சாலையில் வேன் கவிழ்ந்தது; 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்
மதுராந்தகம் அருகே திருமணத்திற்கு சென்ற போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தை சேர்ந்த 25 பேர் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேனில் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது, திடீரென பின் சக்கரம் டயர் வெடித்ததில் வாகனம் நிலைத்தடுமாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த பயணிகள் அச்சத்தில் அய்யோ! அம்மா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என கூக்குரலிட்டனர். ஆனால் தாறுமாக ஓடிய வேன் சாலையின் நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 25 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 25 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுபிதா வயது (12), கோகுல் (16), அஜித்குமார் (25) ஆகிய 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன், சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.