ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவத்தில் திருப்பம் - காதல் விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலையா?

பல்லாவரத்தில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Update: 2023-08-02 07:19 GMT

தாம்பரம்,

பல்லாவரம் குளத்துமேடு வேம்புலியம்மன் கோவில் 5-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் ஹோமிதா (வயது 19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர், கடந்த மாதம் 28-ந்தேதி காலை, பல்லாவரம்-குரோம்பேட்டை இடையே ரெயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் உடல் துண்டாகி இறந்து கிடந்தார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார், ஹோமிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹோமிதா, அதே பகுதியில் உள்ள 'டியூசன் சென்டரில் 9-ம் வகுப்பு படிக்கும் போது, டியூசன் ஆசிரியரான அஜய், (26) என்பவருடன் ஹோமிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையில் ஹோமிதா பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்ற நிலையில் அஜயுடனான காதலை தொடர்ந்துள்ளார். இந்த விஷயம் ஹோமிதா வீட்டிற்கு தெரியவர அவரை கண்டித்துள்ளனர். இதற்கிடையில் ஹோமிதாவின் செல்போனை அவரது பெற்றோர் வாங்கி வைத்து கொண்டனர். இதையறிந்த காதலன் அஜய், அவருக்கு புதியதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்த ஹோமிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், ஹோமிதா ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து எப்படி வெளியே வந்தார்? ஏன் 2 கி.மீ., தூரம் உள்ள குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே வந்து தற்கொலை செய்து கொண்டார்? அஜய்யை பார்ப்பதற்காக வந்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையில் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஹோமிதா ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதால் அது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மாணவியின் இறப்பு எப்படி நடந்தது? அதற்கான காரணம் குறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவிலேயே, ஹோமிதாவின் மரணம் குறித்த முழு விவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

© 2023 All Rights Reserved. Powered by Summit

Tags:    

மேலும் செய்திகள்