கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; தொழிலாளி பலி - டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்

ஆந்திராவில் இருந்த கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-18 10:08 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கட்டுமான வேலைக்காக கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மோகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். லாரியின் பின்பக்கம் கிரானைட் கற்கள் மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் (20), விஜய் (19), அஸ்பக் (25) ஆகிய 3 பேரும் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். லாரியின் உள்ளே ரஹீம் (28) மற்றும் ஒப்பந்ததாரர் சீனிவாசன் (37) ஆகியோரும் அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் லாரி நேற்று காலை திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்திசையில் திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற நிலையில், எதிரே வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பஸ்சின் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் மோகன் வண்டியை சற்று இடது புறமாக திருப்பினார். இதனால் நிலை தடுமாறிய லாரி சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வேனில் பயணித்த ஆசிக் (20) என்பவர் பலத்த காயம் அடைந்து கிரானைட் கற்கள் மீது சரிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதில் விஜய், மற்றும் அஸ்பக் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிரைவர் மோகன், சீனிவாசன், ரஹீம் ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.மேலும் லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் அந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், அந்த லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள கிரானைட்கற்களும் சாலை ஓரம் கொட்டி உடைந்து முழுவதுமாக சேதம் அடைந்தது.

இதைக் கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட தொழிலாளியான விஜய், அஸ்பக் ஆகியோரை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த ஆசிக் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்