திருவள்ளுவர் அறப்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா
வாசுதேவநல்லூரில் திருவள்ளுவர் அறப்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஐயன் திருவள்ளுவர் மன்றத்தின் 17-ஆம் ஆண்டின் தொடக்க விழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் படத்தை ஆசிரியர் வேலுச்சாமி திறந்துவைத்தார்.
முன்னாள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நல்லாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர் ராமர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, சரவணன், பாவாணர் கோட்டப் பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் புலவர் சந்திரன் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்.
திருவள்ளுவர் மன்றத்தின் முயற்சியால் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை வாடகையில்லாமல் நூலகத் துறையிடம் ஒப்படைத்து தீர்மானம் இயற்றிய பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டி காந்திஜி சேவா சங்க தலைவர் தவமணி பேசினார். பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்ச்சிகளை மன்றச் செயலாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பிள்ளையார்சாமி, நகரச் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சுமங்கலி கோமதி சங்கர், சாமிநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்றத்தின் கவுரவ தலைவர் வாசு.கணேசன் செய்திருந்தார். ஆசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.