திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்; ஆயிரம் கிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்...!

திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோவில் பூஜையில் 1000 ஆட்டு கிடாய்கள் வெட்டி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2022-08-12 11:46 GMT

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம், திருவோணத்தை அடுத்துள்ள தளிகைவிடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லபெரம அய்யனார், செம்முனி, முத்துமுனி கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கிடா வெட்டு பூஜை கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி நேற்று இரவு தொடங்கியது.

இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 1,000-க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. இவ்வாறு நேர்த்திகடனாக வெட்டப்பட்ட கிடாய்களின் கறிகள் (இறைச்சிகள்) கோவில் அருகே விரைவாக சமையல் செய்யப்பட்டு, கறிக் குழம்பு வைத்து, 100 மூட்டை அரிசி சாதமாக வடித்து, இன்று காலை 8 மணி முதல் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் அந்தப் பகுதியிலுள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த பூஜை விருந்தில் பங்கேற்றனர். இவர்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சாதத்தை வைத்துக் கொண்டு, 500-க்கும் மேற்பட்டவர்கள் உணவுகளை பரிமாறினர்.

இந்த பூஜை விருந்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல், தரையில் அமர்ந்து வாழை இலையில் மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டனர். மேலும், பக்தர்கள் கூறுகையில் இக்கோவிலின் பூஜையில் பங்கேற்று உணவு அருந்துவதை சுவாமி அளிக்கும் பிரசாதமாக உணருவதாக தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்