வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட டிராக்டர்

விழுப்புரம் அருகே வெள்ளத்தில் டிராக்டர் அடித்துச்செல்லப்பட்டது. டிரைவர் காயத்துடன் மீட்கப்பட்டாா்.

Update: 2022-11-03 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை தொடங்கிய கடந்த 29-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று பெய்த அடை மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சாத்தனூர் அணையில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் அடித்துச்செல்லப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் அருகே உள்ள கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(வயது 55). டிரைவரான இவர், நேற்று மதியம் 2.30 மணி அளவில் அருளவாடி கிராமத்தில் நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் புறப்பட்டார். அந்த சமயத்தில் கொங்கராயனூர்-அருளவாடி இடையே உள்ள தென்பெண்ணை ஆற்று தரைபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் ராமு, அந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் காயத்துடன் ஆற்றில் தத்தளித்த ராமுவை அங்கிருந்தவர்கள் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்