காரில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-09 17:39 GMT

வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதையடுத்து போலீசார் கார் ஒன்றில் உடனடியாக அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த டிரைவர் வேகமாக சென்றார். ஆனால் போலீசார் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் விடாமல் துரத்தியதால் வடுகந்தாங்கல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பியோடினார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த போலீசார் அந்த காரை திறந்து சோதனையிட்டதில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதால் டிரைவர் நிற்காமல் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்