திருட வந்த வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை விட்டு சென்ற திருடன்
விருதுநகர் அருகே திருட வந்த வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை திருடன் விட்டு சென்றான்.;
பொதுவாக வீடுபுகுந்து பொருட்களை திருடர்கள் திருடி தான் செல்வார்கள். ஆனால் விருதுநகர் அருகே ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன் ஆட்கள் வருவதை அறிந்து ஏற்கனவே திருடிய பொருட்களை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான். இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவரது மகன் புதுச்சேரியில் இருந்து ெரயிலில் வருவதையொட்டி தனது மனைவியுடன் முருகன் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டு பின்புறம் வழியாக ஒருவர் தப்பி ஓடியதை கண்டார். அங்கு ஒரு காலணியும், ஒரு பையும் கிடந்தது. அந்த பையை பார்த்த போது அதில் 3 வெள்ளி விளக்குகள், 2 வெள்ளி கிண்ணங்கள், 1 சிறிய வெள்ளி தட்டு, வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி கம்மல், உடைந்த தங்க கம்மல் ஆகியவை இருந்தன. இதை பார்த்து அந்த வீட்டினர் இன்ப அதிர்ச்சி அடைந்தாலும் அது திருட்டு பொருட்கள் என்பதால் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.