ஜவுளிக்கடை ஊ ழியர் கழுத்தை அறுத்து கொலை

ஆண்டிமடத்தில் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் ஜவுளிக்கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-03-21 00:29 IST

கிட்டிப்புல் விளையாட்டு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் புக்கா (என்கிற) குணசீலன் (வயது 24). படிப்பை பாதியில் நிறுத்திய குணசீலன் தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் காலையில் தாமதமாக தூங்கி எழுந்த குணசீலன், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலையில் சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடசென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.

கழுத்தறுத்து கொலை

இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதேபகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்ரூபன்(22), ஆரோக்கியதாஸ்(26) ஆகியோரும் விளையாடினர். அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்ரூபனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர். ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்ரூபன், தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுபட்ட குணசீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அடி-உதை

மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த ஆரோக்கியதாசை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மார்ட்டின்ரூபனை வலைவீசி தேடி வருகின்றனர். கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிமடம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்