காசியை விட வீசம் அதிகமுள்ள ஆற்றுக்கு வந்த சோதனை: கூவமாக மாறிய புண்ணிய நதியின் நிலை மாறுமா?

கூவமாக மாறிய மணிமுக்தா ஆற்றின் நிலை மாறுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனா்.

Update: 2022-10-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உற்பத்தியாகிறது மணிமுக்தாறு. இந்த ஆறு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசனம் செய்து கூடலையாற்றூர் அருகே வெள்ளாற்றுடன் ஒன்றாக கலந்து, பரங்கிப்பேட்டை அருகே கடலில் சங்கமிக்கிறது.

செழுமையாக்கும் ஆறு

விருத்தாசலம் நகரை இரண்டாக பிரித்துக் கொண்டு செல்லும் மணிமுக்தாறு, பல்வேறு சிவ புராணங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அது, பழமை வாய்ந்த நதி என்பது தெரியவருகிறது. இந்த ஆறு பாய்ந்தோடும் பகுதிகளை எல்லாம் செழுமையாக்கி செல்கிறது.

இத்தகையை பல்வேறு புகழடைய மணிமுக்தாறு தற்போது கூவமாக மாறி வருகிறது. ஆம், நகரின் இருபக்கங்களில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மணிமுக்தாற்றில் தான் கலக்கிறது. மேலும் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தும் கொட்டப்படும் குப்பை கிடங்காகவும் மாறிவிட்டது.

பயன்படாத தரைப்பாலம்

'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பார்கள். ஆனால் இன்று ஆறு இருக்கும் விருத்தாசலத்தின் அழகு பாழாகி வருகிறது. மணிமுக்தாற்றை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இதுவரை சுத்தமாகவில்லை, என்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.

மேலும் மணிமுக்தாற்றில் பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பயன்படாத தரைப்பாலத்தால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தரைப்பாலத்தை அகற்றினால்தான் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் செல்லும். காசியை விட வீசம் அதிகம் உடைய மணிமுக்தாறு, கழிவுநீர் கலந்து அசுத்தமான ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கூவமாக மாறியது

புண்ணிய நதியான இந்த ஆற்றில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். மேலும் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவத்தை முன்னிட்டு இந்த ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது மாசி மகத்தன்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். அத்தகைய புண்ணிய நதி, தற்போது கூவமாக மாறியுள்ளதால், அதில் இறங்கவே பொதுமக்கள் தயங்குகின்றனர். அந்த அளவிற்கு சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாக உள்ளது.

தற்போது ஆற்று தண்ணீர் முழுவதும் மாசடைந்துள்ளதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

சேதமடைந்த படிக்கட்டுகள்

மேலும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் முழுவதும் தற்போது சேதமடைந்து விட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆற்றில் சரிந்து விழும் நிலையில் உள்ள படிக்கட்டுகள் சரிந்து விழுந்தால், மழைக்காலங்களில் கரைகள் உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகும் நிலை ஏற்படும்.

இதனை அவ்வப்போது அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்களே தவிர, இதுவரை சீரமைக்க தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மணிமுக்தாற்றில் உள்ள பயனற்ற தரைப்பாலத்தை அகற்றி, கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், சேதமடைந்த படிக்கட்டுகளையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீராட முடியாமல் தவிக்கும் பக்தர்கள்

இதுகுறித்து வக்கீல் விஜயகுமார் கூறுகையில், விருத்தாசலம் பொதுப்பணித் துறையும், நகராட்சி நிர்வாகமும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் பகுதியில் உள்ள படித்துறையை சரி செய்வது யார்? என போட்டி போட்டுக் கொண்டு கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் ஆற்றுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், விநாயகர் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே அமர்ந்து திதி கொடுத்து விட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஆற்றில் நீராட முடியாமல் தவிக்கின்றனர். எனவே மணிமுக்தாற்றில் உள்ள படித்துறையை சரி செய்யும் பணியை உடனடியாக அதிகாரிகள் தொடங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்