மொடக்குறிச்சி அருகே நார் மில்லில் பயங்கர தீ விபத்து; ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

மொடக்குறிச்சி அருகே நார் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2023-07-13 20:45 GMT

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே நார் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

நார் மில்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நடுப்பாளையம் அருகே உள்ள வடுகனூரில் நார் மில் ஒன்றை கடந்த 5 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தகர சீட்டுகளாலும், ஓலை கீற்றுகளாலும் மில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் வடமாநிலத்தவர்கள் மட்டும் வேலையை முடித்துவிட்டு இரவில் மில்லுக்குள்ளேயே தங்கிவிடுவார்கள்.

தீ விபத்து

அதேபோல் நேற்று முன்தினம் வேலை பார்த்துவிட்டு இரவில் வடமாநில தொழிலாளர்கள் மில்லுக்குள் படுத்து தூங்கிகொண்டிருந்தனர். இதனிடையே நள்ளிரவு திடீரென தேங்காய் நார்களில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தேங்காய் நார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைப்பார்த்த தொழிலாளர்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து, தொழிலாளர்களுடன் இணைந்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் முடியவில்லை.

ரூ.30 லட்சம்

இதைத்தொடர்ந்து இதுபற்றி கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து மில்லில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் மில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருட்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். நார் மில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்