பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
ஈரோட்டில், பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.;
ஈரோட்டில், பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
பிளக்ஸ் பிரிண்டிங்
ஈரோடு திண்டல் வேலன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் ஈரோடு -மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் எந்திரம், கம்ப்யூட்டர்கள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை நிறுவனத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் பிரிண்டிங் நிறுவனத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
எந்திரங்கள் எரிந்து நாசம்
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 30 நிமிடத்துக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சி.என்.சி. எந்திரம், நவீன பிரிண்டிங் எந்திரம், ஏ.சி, கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசம் ஆனது. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
விசாரணை
அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.