பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

பட்டாசு வெடித்ததை தட்டி கேட்ட தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-09-22 08:49 GMT

சாவு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பஜனை கோவில் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு சாமி ஊர்வலம் செல்லும் போது அதே பகுதியில் உள்ள கார்த்திக் (வயது 22) என்பவரின் வீட்டு வாசல் முன்பு ஒரு கும்பல் பட்டாசு வெடித்தது. இதனை தட்டி கேட்ட கார்த்திக்கை அந்த கும்பல் செங்கல்லால் மண்டையை உடைத்தது.

இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கைது

இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பொத்தேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராகேஷ் என்கிற மணி (20), பாரதியார் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்கிற கீர்த்தி (22), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்கிற சிரஞ்சீவி (19) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கந்தா, கோபால், நவீன், லோகேஷ், சுரேஷ், தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே முக்கிய குற்றவாளிகளை கைது செய்தால் தான் கார்த்திகின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்