வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

காட்பாடி காந்திநகரில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-30 17:07 GMT

திருட முயற்சி

காட்பாடி காந்திநகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓமன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர் தற்போது அவரது மனைவியுடன் காட்பாடியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு ஆனந்தகுமார் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு கண்விழித்த ஆனந்தகுமார் மின்விளக்கை போட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வாலிபர் கைது

இதனை பார்த்த ஆனந்தகுமார் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் காந்திநகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தகுமார் வீட்டில் கதவை உடைக்க முயன்ற வாலிபர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்த அருண்குமார் என்கிற அருண் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரிடம் கதவின் பூட்டு போன்றவற்றை உடைக்கும் இரும்பு கம்பிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அருண்குமார் மீது ஏற்கனவே சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், குடியாத்தம் ஆகிய பகுதியில் திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் ஆனந்தகுமார் வீட்டில் திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்