டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்பிய வாலிபர்; உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஆத்திரம்
உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் பெண் கவுன்சிலரின் மகன் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கி உல்லாசமாக இருக்க பெண்கள் தேவையா? என்று அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவலம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 33). இவரது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், உல்லாசமாக இருக்க பெண்கள் வேண்டும் என புதுப்புது எண்களில் இருந்து நச்சரித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நித்தியானந்தம் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் நித்தியானந்தத்திற்கு செல்போன் மூலம் தொல்லை கொடுத்த எண்களை கண்டறிந்து அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி விசாரணை நடத்தினர்.
அதில் பேசிய நபர்கள் நித்தியானந்தத்தின் செல்போன் எண்ணை சமூக வலைதளமான டுவிட்டரில் உள்ள ஒரு கணக்கில் உல்லாசமாக இருக்க பெண்கள் தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என போடப்பட்டு இருந்ததாகவும், அதன்படி போன் செய்ததாகவும் கூறினர்.
கைது
தொடர்ந்து குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை ஆய்வு செய்த போது அது கீழவலம் பகுதியை சேர்ந்த கஜபதி (34) என்பவரின் போலி கணக்கு என்பது தெரியவந்தது. தொடர்ந்து கஜபதியை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் கீழவலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு கஜபதி மற்றும் நித்தியானந்தத்தின் தாய் இருவரும் போட்டியிட்டுள்ளனர்.
இதில் நித்தியானந்தத்தின் தாய் வெற்றி பெற்றதால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதனால் நித்தியானந்தத்தை பழி வாங்க டுவிட்டரில் போலி கணக்கை தொடங்கி அதில் உல்லாசமாக இருக்க பெண்கள் தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என நித்தியானந்தத்தின் செல்போன் எண்ணை பதிவிட்டதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கஜபதி மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.