கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-06-06 18:45 GMT

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கல்லறை தோட்டம் அடுத்த காட்டுப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

மேலப்பாளையம் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அதாவது, நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜோஸ் செல்வராஜ் (வயது 34). இவர் பாளையங்கோட்டையில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

கோர்ட்டில் ஆஜர்

இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலையில் ஜோஸ் செல்வராஜ் மற்றும் 3 பேர் நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

பின்னர் அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறை பகுதிக்கு சென்றபோது, ஜோஸ் செல்வராஜ் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பு

மேலும், ஜோஸ் செல்வராஜூடன் சென்ற 3 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரேனும் மர்மநபர்கள் இதில் ஈடுபட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் கொலையாளிகள் பிடிப்பட்ட பின்னர் தான் கொலைக்கான காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்