தந்தையை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
நாட்டறம்பள்ளி அருகே தந்தையை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு கிரி (32), முத்து (30) என்ற மகன்களும், சந்தியா (27) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முத்துவிற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் ஏன் தகராறு செய்கிறாய் என முத்துவிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் படுத்துக்கொண்டு இருந்த மோகனின் கழுத்தை காலால் மிதித்து கொலை செய்து உள்ளார்.
மேலும் சகோதரி சந்தியா மற்றும் வளர்மதி ஆகியோரையும் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முத்து கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனி அறையில் இருந்ததாகவும், இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.