தாமிரபரணி ஆற்றுக்குள் தலைகீழாக குதித்த வாலிபர் சாவு
மருதூர் அணைக்கட்டில் தாமிரபரணி ஆற்றுக்குள் தலைகீழாக குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
ஸ்ரீவைகுண்டம்:
மருதூர் அணைக்கட்டில் தலைகீழாக தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து குளித்த வாலிபர் படுகாயம் அடைந்து பரிதாபமாக பலியானார்.
வாலிபர்
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் மங்கல குடியிருப்பு தேவர் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 24). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தச்சநல்லூரில் இருந்து
இசக்கிமுத்து தம்பி உட்பட நண்பர்கள் 10 பேருடன் வல்லநாடு மருதூர் அணைக்கட்டு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்துள்ளார்.
தலைகீழாக குதித்தார்
அப்போது அனைவரும் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, இசக்கிமுத்து அணைக்கட்டில் இருந்து தண்ணீரில் தலைகீழாக குதித்துள்ளார். இதில் அவரது பின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார். சிறிது நேரத்தில் ஆற்று தண்ணீரில் மூழ்கிய அவரை நண்பர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.