மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய வாலிபர் கைது
அண்ணியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கமுதி
அண்ணியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூக்கில் பிணம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராம நதி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 26). இவரது மனைவி சுவேதா(22). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சுவேதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுவேதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்ததால் உதவி கலெக்டர் அப்தாப் ரசூலும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில், அவரது கணவர் சரத்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அடிக்கடி தகராறு
அதாவது சரத்குமாருக்கும், அவரது அண்ணன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த சுவேதா கள்ளத்தொடர்பை விட்டுவிடுமாறு கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கண்டுெகாள்ளவில்லை. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரத்குமார், கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்கவிட்டார்.
நாடகமாடிய கணவர் கைது
தூக்குப்போட்டு மனைவி தற்கொலை செய்தது போல் நாடகத்தை அவர் அரங்கேற்றியதும் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.