வெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வெள்ளியங்கிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.;

Update: 2024-02-27 14:24 GMT

கோவை,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்கரெட்டி வீதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 22). பி.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன், கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு வர திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்த அவர்கள், அடிவாரத்தில் இருந்து மலையேற தொடங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 6-வது மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோவில் அடிவாரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அதிக குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்