டாக்டர் வீட்டுக்குள் புகுந்து சைக்கிள் திருடிய வாலிபர்
டாக்டர் வீட்டுக்குள் புகுந்து சைக்கிள் திருடிய வாலிபரால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.;
பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). சித்தா டாக்டர். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டு வளாகத்தில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்றனர். பின்னர் திருட்டு குறித்து மனோகரன் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மனோகரன் வீட்டில் சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதற்கிடையே மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் வீடியோ காட்சிகள் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சுமார் 20 வயதுடைய வாலிபர் வீட்டு வளாகத்தில் சென்று சைக்கிளை திருடி ஓட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சியை துருப்பு சீட்டாக வைத்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் பட்டப்பகலில் டாக்டர் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.