வீடு புகுந்து வாலிபர் கொலை
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
ரவுடி
ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இறந்துவிட்டார். இவருடைய மகன் பிரபுதேவா (வயது 28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. தாய் முருகேசுவரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
பிரபுதேவா, அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததால் அவரின் தாய் இரவில் வீட்டில் தங்காமல் அருகில் உள்ள அவரது தங்கை அமுதாவின் வீட்டிற்கு சென்று விடுவாராம். முருகேசுவரி தினமும் கூலி வேலைக்கு சென்றுவந்துள்ளார். சில நாட்களாக அம்மா உணவகத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
தலையில் வெட்டுக்காயம்
நேற்று முன்தினம் மாலை பிரபுதேவா வீட்டின் எதிரே தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம். இரவில் முருகேசுவரி வழக்கம்போல் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மகனுக்கு டீ போட்டு கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது, மகன் பிரபுதேவா அசைவற்று படுத்து இருந்ததால் திருப்பி பார்த்துள்ளார். காதின் அருகில் இருந்து ரத்தம் வழிந்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.
பின்னர் காதின் அருகிலும், தலையிலும் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அடித்துக்கொலை
தகவல் அறிந்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வீட்டின் உள்பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு, 2 முறை சுற்றி மகர்நோன்பு பொட்டல் காலியிடம் வரை சென்று நின்றது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழைய கட்டிடத்தில் நண்பர்கள் சிலருடன் பிரபுதேவா மதுகுடித்ததாக தெரியவந்தது. அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலினால் வீடு புகுந்து தாக்கியதில், பிரபுதேவா இறந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி வழக்குபதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.