திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2023-04-30 10:08 GMT

கொலை மிரட்டல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ருத்ரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 37). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருக்கழுக்குன்றம் மசூதி தெரு மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனு அளித்தார். மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சர்புதீன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீது விசாரணை மேற்கொண்டு அக்கிரமிப்புகளை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் சர்புதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சர்புதீன் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் மசூதி தெருவை சேர்ந்த ஒருவர் சர்புதீனை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து சர்புதீன் தனது வக்கீலுடன் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

வெட்டிக்கொலை

நேற்று மதியம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்புதீன் மற்றும் சிலர் சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு சர்புதீன் சென்னை செல்வதற்காக ஒட்டலில் இருந்து வெளியே வந்து காரை திறந்து உள்ளே அமர்ந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சர்புதீனின் கார் கண்ணாடியை உடைத்து கார் கதவை திறந்து சர்புதீனை சரமாரியாக வெட்டியதில் சர்புதீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து சர்புதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்