மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
கொடைக்கானலில் மளிகை கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சுதா தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது, சுதாவின் கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சுதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுதா கடையின் அருகில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கட்டிட தொழிலாளியாக மதுரை செல்லூரை சேர்ந்த ஜெயராமன் (25) என்பவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இதனால் அடிக்கடி சுதாவின் மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றுள்ளார். அப்போது கல்லாப்பெட்டி இருக்கும் இடத்தை நோட்டமிட்ட ஜெயராமன், நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரத்தை அவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தார்.