ஆர்.கே. பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆர்.கே. பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-21 08:51 GMT

பள்ளிப்பட்டு தாலுகா, அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் கோலேரி அருகே சிலர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆர்.கே. பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் கோலேரி இணைப்பு சாலை அருகே திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

போலீசார் விரைந்து சென்று அவரை விரட்டி பிடித்தனர். அவரிடம் இருந்த பையில் சோதனை செய்த போது சுமார் ஒரு கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலம் ஓ.ஜி. குப்பம் பகுதியில் இருந்து வாங்கி வந்து அந்த பகுதியில் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் கஞ்சா விற்ற வாலிபர் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் வீராணத்தூர் காலனி பாரதியார் தெருவை சேர்ந்த சேகர் என்கிற குணசேகர் என்கிற லீக் (வயது 24) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்