வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

இரணியல் அருகே வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

குமரி மாவட்டத்தில் புகையிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், அவற்றை முற்றிலும் ஒழிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் கண்டன்விளை பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா செடிகள்

அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கண்டன்விளையை ேசர்ந்த ரசல்ராஜ் மகன் அஜெய் மைக்கிள்(வயது24) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 4 கஞ்சா செடிகள் நிற்பதை கண்டனர். வீட்டிலேேய கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அஜெய் மைக்கிளை போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சா, 4 கஞ்சா செடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா செடிகள் எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்