திருவள்ளூர் அருகே சாலையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே சாலையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரகு, சுப்பிரமணி ஆகியோர் நேற்று திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் கத்தியுடன் நின்று கொண்டு அங்கும் இங்குமாக சுற்றி அந்த வழியாக வருவோர் போவோரை தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார். மேலும் எனக்கு பணம் தரவில்லை என்றால் கத்தியால் வெட்டுவேன் என்றும், யாராவது தன்னை பிடிக்க முயற்சி செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் திருவள்ளூர் அடுத்த விடையூர் காரணி பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 22) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.