போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர்

கடலூா் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபா் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 18:45 GMT

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கினர். தொடர்ந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரை ஆசுவாசப்படுத்தினர்.

அதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் காட்டுமன்னார்கோவில் பெரியார்நகரை சேர்ந்த ஆனந்தபாபு (வயது 33) என்பது தெரிய வந்தது. அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியதாகவும், வீட்டுக்கு வரும் பொதுபாதையை ஒருவர் ஆக்கிரமித்து வழிவிடாமல் தடுத்து வருவதாகவும், இது பற்றி காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தது. மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார், இது பற்றி உரிய விசாரணை நடத்த காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்