டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்த வாலிபரால் பரபரப்பு
புதுக்கோட்டையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்திருந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை சிவானந்தபுரம் 3-ம் வீதியில் டிரான்ஸ்பார்மரில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏறி அமர்ந்தபடி இருந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் மின்சார வாரியத்திற்கு உடனடியாக தகவல் தொிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட உதவி அலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். டிரான்ஸ்பார்மரில் ஏணிப்படி வைத்து தீயணைப்பு வீரர்கள் ஏறி சென்றனர். மேலும் அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். அவரது உடலில் லேசாக தீப்பொறி காயங்கள் இருந்தன. அவர் டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் சிவானந்தபுரம் 1-ம் வீதியை சேர்ந்த அருண் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. அவர் எதற்காக டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்தார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியினர் அங்கு திரண்டனர். டிரான்ஸ்பார்மரில் வாலிபர் ஏறி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.