காருக்குள் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்..

காருக்குள் வைத்து பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Update: 2024-04-26 16:07 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தாண்டவன்குளம் கிராமம் வ.உ.சி. தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சந்துரு(வயது 24). நேற்று முன்தினம் இரவு இவர் தனக்கு சொந்தமான காரில் புத்தூரில் இருந்து தாண்டவன்குளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தூர் பஸ் நிறுத்தத்தில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரை பார்த்த சந்துரு காரில் ஊருக்கு அழைத்து செல்வதாக கூறினார். இதை நம்பி அந்த பெண்ணும் சந்துருவின் காரில் ஏறி உள்ளார்.

காருக்குள் ஏறியதும் அந்த பெண்ணுக்கு சந்துரு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக காரை விட்டு இறங்க முயற்சித்தார். இதையடுத்து சந்துரு காரை நிறுத்தினார். அப்போது காரை விட்டு கீழே இறங்கிய அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலால் சந்துருவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுதொடர்பாக அந்த பெண் புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்