மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

Update: 2022-10-28 19:38 GMT

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாலிபர்

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை டான்பாஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின் என்பவர் மகன் பிரின்ஸ் லாரா என்கிற சின்னா(வயது 28). இவர், பெயிண்டர்‌ வேலை பார்த்து வந்தார்.

இவர் மீது சில வழக்குகள் இருப்பதாகவும், இவருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னா, திருக்கானூர்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

பின்னர் நள்ளிரவின்போது சின்னா தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சின்னா அலறி உள்ளார். உடனே அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து அக்கம், பக்கத்தினர் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சின்னாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சின்னா பரிதாபமாக இறந்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா கூறும்போது, திருக்கானூர்பட்டிக்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பிரின்ஸ் லாரா என்கிற சின்னா மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது இந்த கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என்றார்.

வலைவீச்சு

இந்த நிலையில் சின்னாவை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை அருகே கங்கா நகர் பகுதியில் சாமிநாதன் என்கிற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தஞ்சை அருேக உள்ள திருக்கானூர்பட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்