ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.8½ லட்சத்தை இழந்த இளம்பெண்
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.8½ லட்சத்தை இளம்பெண் இழந்தார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் விளம்பரம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கும்மாங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சீதாலட்சுமி (வயது 27). இவர் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் தெரிவித்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். பின்னர் அவரது வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்ட லிங்கை சீதாலட்சுமி கிளிக் செய்து தனது வங்கி கணக்கு விவரத்தை தெரிவித்துள்ளார். மேலும் ரூ.100 முதலீடு செய்து ரூ.160 சம்பாதித்துள்ளார். அதன்பின் ரூ.500 செலுத்தியதில் ரூ.2 ஆயிரம் சம்பாதித்திருக்கிறார். இதனால் அந்த நிறுவனத்தை நம்பி தொடர்ந்து பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.
ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 47 ஆயிரத்து 18 வரை செலுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மர்ம ஆசாமியின் வாட்ஸ்-அப் எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர். அந்த எண் கேரள மாநில முகவரியை காண்பித்துள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.