மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை?

கீழப்பழுவூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-12 18:05 GMT

வாலிபர் பிணம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழில்பேட்டை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தொழில்பேட்டைக்கு அருகே உள்ள திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மது போதையில் தகராறு?

இதில், இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி- ராஜேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் விக்னேஷ் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. ஐ.டி.ஐ. படித்துள்ள விக்னேஷ் சிங்கப்பூருக்கு செல்வதற்காக விசாவுக்காக காத்திருந்தது தெரியவந்தது. மேலும் நேற்று இரவு அவரது செல்போனுக்கு வந்த அழைப்பின் பேரிலேயே அவர் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், விக்னேஷ் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்ததால் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதேனும் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்