தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
கல்வராயன்மலையில் நடந்த விபத்தில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். 2 நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.;
கச்சிராயப்பாளையம்:
கல்வராயன்மலையில் உள்ள தரிசுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(வயது 22). இவர், தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நண்பர்களான ராஜா(23), சிவா(22) ஆகியோருடன் தரிசுக்காடு கிராமத்தில் இருந்து வெள்ளிமலைக்கு புறப்பட்டார்.
ஆலத்தி கிராம சாலை பிரிவு அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவரில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாலிபர் பலி
பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவா, ராஜா ஆகிய 2 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.