தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

Update: 2023-05-14 19:13 GMT

முக்கூடல்:

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

வாலிபர்

முக்கூடல் அருகே உள்ள மைலப்புரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் கணேசமூர்த்தி (வயது 23). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது அக்காள் மற்றும் மருமகனுடன் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது கணேசமூர்த்தி, அக்காள் மகனை ஆற்றின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

அப்போது ஆழமான பகுதியில் இறங்கி உள்ளார். அந்தப் பகுதி சுழல் பகுதி என்பதால் அவரை உள்ளே இழுத்துள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கணேசமூர்த்தி, தனது அக்காள் மகனை தோளின் மீது உயரமாக சுமந்து வெளியே தூக்கி காண்பித்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டவாறு தத்தளித்தார்.

தண்ணீரில் மூழ்கி சாவு

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்்சி அடைந்து உடனடியாக ஓடிச் சென்று அந்த சிறுவனை காப்பாற்றி கரையில் விட்டனர். பின்னர் அவர்கள் கணேசமூர்த்தியை காப்பாற்ற சென்றபோது, அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். எனவே அவரை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து உடனடியாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேடினர். வெகு நேரத்துக்கு பின்னர் கணேசமூர்த்தியை மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்