கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி
நிலக்கோட்டை அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை மகன் ஜீவா (வயது 20). பி.எஸ்சி. படித்துள்ளார். இவர், நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரில் உறவினரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள பெரியாறு பிரதான பாசன கால்வாயில் ஜீவா குளிக்க சென்றார். கால்வாயில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் நீரில் இறங்கி காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அதற்குள் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் படைவீரர்கள் அங்கு வந்து ஜீவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அணைப்பட்டி அருகே கால்வாயில் ஜீவாவின் உடலை மீட்டனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.