மின்மாற்றியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

திருவட்டார் அருகே மின்மாற்றியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-12 16:46 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே மின்மாற்றியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

டிரைவர்

திருவட்டாரை அடுத்த தோட்டவாரம் பாலதோப்புவிளையை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் ஷெர்லின் (வயது 29). டெம்போ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய நண்பர் மூவாற்றுமுகம் வள்ளங்குழிவிளையை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் விஜின் (25).

இருவரும் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜின் ஓட்டினார். ஷெர்லின் பின்னால் உட்கார்ந்து இருந்தார். வீயன்னூர் தோட்டத்து விளை அருகே வரும்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் ரோட்டோரம் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

சாவு

இதில் ஷெர்லினின் தலை மற்றும் நெற்றியில் படுகாயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம்-பக்கத்தினர் உடனடியாக அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஷெர்லின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

ஆபத்தான நிலையில் இருந்த விஜினுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து, ஷெர்லின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்