திருவொற்றியூரில் இறுதி அஞ்சலியின்போது சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

திருவொற்றியூரில் இறுதி அஞ்சலியின்போது மாணவியின் உடல் இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-02-20 04:40 GMT

மாணவி சாவு

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சை செய்ய திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி காலை மாணவி அபிநயா பரிதாபமாக இறந்தார்.

தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பள்ளி மாணவி இறந்து போனார். எனவே அந்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டனர்.

இறுதி அஞ்சலி

அதன்பிறகு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் பிரேத பரிசோதனையில் திருப்தி இல்லை என்று கூறி மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதியின் வீட்டுக்கு சென்று முறையிட்டனர்.

அப்போது நீதிபதியின் அறிவுரையை ஏற்று மாணவி அபிநயாவின் உடலை பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 11.30 மணியளவில் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலையில் உள்ள நந்தினி வீட்டில் மின்சார குளிர்சாதன சவப்பெட்டியில் மாணவி நந்தினியின் உடலை வைத்திருந்தனர். மாணவியின் உறவினர்களும், அவரோடு படித்த மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் மாணவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாலிபர் பலி

அப்போது திடீரென மாணவியன் உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் மின்சார கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த பெட்டியை தொட்டபடி நின்று மாணவியின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர்கள் அலறினர்.

அதில் 3 பேருக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சென்னை காசிமேட்டை சேர்ந்த மாணவியின் உறவினரான அஜித் (19) என்பவர் பரிதாபமாக இறந்தார். மேலும் சவுமியா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

உடனடியாக குளிர்சாதன சவப்பெட்டிக்கு சென்ற மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏற்கனவே அங்கு திருவொற்றியூர் போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தனர். உடனடியாக அவர்கள் குளிர்சாதன சவப்பெட்டியின் உரிமையாளரான தீனன் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த வாலிபர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்