குடிபோதையில் ரகளை செய்ததை கண்டித்த போலீசாரை ஓட ஓட விரட்டி தாக்கிய வாலிபரால் பரபரப்பு - வீடியோ வைரல்

சென்னை பெரவள்ளூரில் குடிபோதையில் ரகளை செய்ததை கண்டித்த போலீசாரை வாலிபர் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2023-07-21 08:49 GMT

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 24-வது தெரு ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் குடிபோதையில் அந்த பகுதி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்து வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்து வீட்டுக்கு செல்லும்படி கூறினர்.

போதையில் இருந்த வாலிபர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர், ரோந்து போலீசாரை ஓட ஓட விரட்டி கையால் சரமாரியாக தாக்கினார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போதை வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 19) என்பது தெரிய வந்தது. மேலும் அப்பகுதியில் நின்றிருந்த 3 இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்ததும் தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரவள்ளூர் போலீசார், சாந்தகுமாரை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரை சாந்தகுமார் ஓட ஓட விரட்டி தாக்கிய வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்