பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

கொள்ளிடம் அருகே கடைவீதியில் பொதுமக்கள் முன்பு பிளேடால் வாலிபர் ஒருவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-25 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கடைவீதியில் பொதுமக்கள் முன்பு பிளேடால் வாலிபர் ஒருவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிளேடால் கழுத்தை அறுத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சாலை ஓரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று அமர்ந்து இருந்தாா். அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடால் அவரின் மார்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியை தானே அறுத்துக் கொண்டார். இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் அருகில் யாரும் செல்லவில்லை.

சிகிச்சை

இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் இருந்து பிளேடை நைசாக பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்த பழனிசாமி என தெரியவந்தது. இவர் ஏன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்