திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் தலைமையில் குழுவினர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-20 17:03 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனங்கள்

பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களின் உறுதித்தன்மை ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஆய்வு திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த வாகனங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

பேட்டி

ஆய்வுக்கு பின் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் சுமார் 158 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதன்மூலம் 475 தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து வாகனங்களும் இந்த ஆண்டு ஆய்வு குழுவினர் முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா, பள்ளி முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா, கிரில் சரியாக இருக்கின்றதா, அவசர வழி முறைப்படி இருக்கின்றதா, தீயணைப்பு கருவி காலாவதியாகாமல் இருக்கின்றதா, முதல் உதவி பெட்டி வாகனத்தில் இருக்கின்றதா போன்ற பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனடியாக சரி செய்தால்தான் தகுதிச்சான்று (எப்.சி.)வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சரி செய்த பின்னரே எப்சி வழங்கப்படும். மேலும் தீயணைப்பு கருவி எவ்வாறு உபயோகிக்க வேண்டும் மற்றும் முதலுதவி பெட்டியை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

விழிப்புணர்வு

மேலும் வழக்கமாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருக்கும் போது பெற்றோர்கள் மூலமும், பள்ளியில் இருக்கும் போது ஆசிரியர் மூலமாகவும் பாதுகாப்பாய் இருப்பார்கள், வாகனத்தில் செல்கின்ற பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வாகனத்தில் அனைத்து சீட்டுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசர வழி மற்றும் தீயணைப்பு கருவிகள் இயக்குவதற்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். நமது மாவட்டத்தில் எந்த ஒரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. மாவட்டத்தில் குழந்தை சம்பந்தமான எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், ராமகிருஷ்ணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், வெங்கடாசலம், தீயணைப்புத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்