கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்

கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-25 20:25 GMT

தொட்டியம்:

பஸ் இயக்கப்படுவது நிறுத்தம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் இருந்து நாமக்கல்லுக்கு தினமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவிகள் தினமும் இந்த டவுன் பஸ்சில் கட்டணமில்லாமல் பயணம் செல்வது வழக்கம்.

இதேபோல் கல்லூரி முடிந்து மதியம் அதே வழித்தடத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்சில் ஊருக்கு திரும்பி வருவார்கள். இந்நிலையில் மதியம் நாமக்கல்லில் இருந்து புறப்படும் பஸ் வழித்தடத்தில் அந்த டவுன் பஸ் இயக்கப்படுவதை போக்குவரத்து கழகம் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையடுத்து தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவிகள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் கார்த்திகைப்பட்டி பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்து மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருச்சி-நாமக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்