அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் போராட்டம்

வேப்பூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை 8 ஆண்டுகளாக சுத்தம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-01 19:29 GMT

ராமநத்தம்:

வேப்பூரை அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாததோடு, முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

அரசு பஸ் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடம், கேன் ஆகியவற்றுடன் திரண்டனர். அப்போது அந்த வழியாக நிராமணியில் இருந்து மாளிகை கோட்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை திடீரென சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்