சாலையில் சென்ற காரில் திடீர் தீ

சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

Update: 2022-11-14 19:33 GMT

தா.பழூர்:

கார் தீப்பற்றி எரிந்தது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன்(வயது 42). இவர் குமராட்சி பிற்பட்டோர் மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தா.பழூரில் உள்ள அவரது நண்பர் சந்தோஷ்குமாரை பார்ப்பதற்காக பாலமுருகன் தனது காரில் வந்துள்ளார்.

அவரை பார்த்த பின்னர் மீண்டும் தா.பழூரில் இருந்து இரவு 8 மணி அளவில் சிதம்பரம் நோக்கி தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார். தா.பழூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கோடங்குடி - அணைக்குடம் இடையே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சாலையில் சென்றபோது அவரது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடி உயிர்தப்பினார்.

எலும்புக்கூடு போல்...

இந்நிலையில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள், சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கும், தா.பழூர் போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர்.

மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் ராஜூ தலைமையில் தீயணைப்பு வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்கள், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பாலமுருகனின் கார் எரிந்து எலும்புக்கூடு போல் உருக்குலைந்து காணப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து பாலமுருகன் கூறுகையில், கோடங்குடி கிராமத்தை கடந்ததும் காரில் இருந்த ஏ.சி. எந்திரத்தை இயக்கியதாகவும், அப்போது திடீரென ஏ.சி. இருந்த பகுதியில் இருந்து புகை வர தொடங்கியது என்றும், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி தப்பியதாகவும் தெரிவித்தார்.

சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்