மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மேலச்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். மாற்றுத்திறனாளியான இவர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அவரிடம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். கடந்த 3 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுபற்றி கேட்டதற்கு வேலையை விட்டு செல்லும்படி கூறுகிறார்கள். எனது பணியிலும் உரிய பாதுகாப்பு இல்லை. எனவே மாற்றுத்திறனாளியாகிய எனக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன்பேரில் அவர், போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.