இறந்த கன்றுக்குட்டியுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி திடீர் தர்ணா

டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கன்றுக்குட்டி இறந்து போனது என்று விவசாயி ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-06 17:43 GMT

டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கன்றுக்குட்டி இறந்து போனது என்று விவசாயி ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உடல்நிலை பாதிப்பு

வேலூர் சலவன்பேட்டை தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), விவசாயி. இவர் 9 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு கடந்த 5 நாட்களுக்கு முன்பாக கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அதன் தொப்புள் கொடியில் புண் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மணிகண்டன் அந்த கன்றுக்குட்டியை நேற்று வேலூர்-பெங்களூரு சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.அங்கு அதனை பரிசோதித்த டாக்டர்கள் 3 ஊசிகள் போட்டுள்ளனர். அதையடுத்து மணிகண்டன் கன்றுக்குட்டியை வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து சிறிது நேரத்தில் கன்றுக்குட்டி பரிதாபமாக இறந்து போனது. அதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்பதற்காக இறந்த கன்றுக்குட்டியுடன் கால்நடை மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

விவசாயி தர்ணா

அதனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களிடம் மணிகண்டன் தவறான சிகிச்சையால் தான் தனது கன்றுக்குட்டி இறந்துபோனது என்று கூறி உள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கலெக்டர் பணியின் நிமித்தமாக வெளியே சென்றிருப்பதாகவும், பின்னர் வந்து புகார் மனு அளிக்கும்படியும் மணிகண்டனிடம் தெரிவித்தனர். அதனை ஏற்காத அவர் கலெக்டர் வரும் வரை நான் இங்கே தான் இருப்பேன் என்று கன்றுக்குட்டியை மடியில் வைத்து கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், நான் கன்றுக்குட்டிக்கு மருந்து வாங்கி வருவதற்காக சென்றேன். டாக்டர்கள் கன்றுக்குட்டியை பரிசோதித்து 3 ஊசிகள் போட்டால் தான் தொற்று மற்றும் காய்ச்சல் சரியாகும் என்றனர். அப்போது நான் பிறந்து 5 நாட்களே ஆன கன்றுக்குட்டிக்கு 3 ஊசிகள் போட்டால் தாங்குமா என்று கேட்டேன். அதற்கு டாக்டர்கள், எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னார்கள். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு கொண்டு சென்ற 30 நிமிடங்களில் கன்றுக்குட்டி இறந்து விட்டது என்றார்.

உரிய சிகிச்சை

தர்ணாவில் ஈடுபட்ட மணிகண்டனை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், கன்றுக்குட்டியின் தொப்புள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கடுமையான தொற்று ஏற்பட்டு அளவுக்கு அதிகமான காய்ச்சல் காணப்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மணிகண்டனிடம் தெரிவித்து விட்டுதான் கன்றுக்குட்டிக்கு ஊசி செலுத்தப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்